ஆஸ்திரேலியாவின் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடக குறைந்தபட்ச வயது தொடர்பான நாடாளுமன்ற வாக்குமூலம்
அக்டோபர் 28, 2025
இன்று, எங்கள் உலகளாவிய கொள்கை & தளச் செயல்பாடுகள் பிரிவின் SVP ஜெனிஃபர் ஸ்டவுட் அவர்கள், Meta மற்றும் TikTok நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டவாக்கம் தொடர்பான விவாதத்தில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் முன்பு வாக்குமூலம் அளித்தார். ஜெனிஃபரின் தொடக்க அறிக்கையை நீங்கள் கீழே வாசிக்கலாம்.
+++
சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டம் தொடர்பான Snapஇன் அணுகுமுறை குறித்துத் தெரிவிப்பதற்காக இந்த குழு முன்பு ஆஜராக வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Snapchat என்பது ஒரு செய்தி அனுப்பும் செயலி ஆகும், அது எப்போதும் செய்தி அனுப்பும் செயலியாகவே இருக்கும். நிறுவப்பட்ட காலத்திலிருந்தே, நெருங்கிய நண்பர்கள் அந்தந்தத் தருணங்களில் தொடர்பு கொள்வதற்கு உதவும் வகையில் Snapchat வடிவமைக்கப்பட்டுள்ளது — நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்கள், காணொளிகள், அரட்டைகளின் வழியாக இணைப்பில் இருக்க அது உதவுகிறது.
காலப்போக்கில் நாங்கள் பல அம்சங்களைச் சேர்த்திருந்தாலும், Snapchatஇன் மையநோக்கமாகவும், இன்றும் எங்கள் சமூகம் அதைப் பயன்படுத்தும் முதன்மை வழிமுறையாகவும் செய்தி அனுப்புதல் உள்ளது.
செய்தி அனுப்புதல், குரல் அழைப்பு அல்லது காணொளி அழைப்பை ஒரே நோக்கமாக அல்லது முதன்மை நோக்கமாகக் கண்ட தளங்களுக்குக் குறைந்தபட்ச வயதுத் தேவைகளில் இருந்து விதிவிலக்களிக்கும் விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இளம் வயதினர் தங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் தொடர்புகொள்வது அவசியமான தேவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளதாலேயே இந்த விதியை வகுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் Snapchatஇல் செலவிடப்படும் நேரத்தில் 75%க்கும் அதிகமான நேரம் செய்தி அனுப்புதல் மற்றும் அழைப்பிற்காகச் செலவிடப்பட்டுள்ளது — இது WhatsApp, Messenger, iMessage போன்ற சேவைகளில் பயன்படுத்தப்படும் அதே வகையிலான செயல்பாடாகும், அந்தச் சேவைகள் அனைத்திற்கும் இந்தக் கட்டுப்பாடுகளில் இருந்து விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருந்தபோதிலும், வயதுக் கட்டுப்பாடு உள்ள சமூக ஊடகச் சேவை என Snapchat வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்திற்கு நாங்கள் உடன்படவில்லை. அரசாங்கம் குறிப்பிட்டுள்ள அணுகுமுறைக்கு ஏற்ப, Snapchatஇன் முதன்மை நோக்கம் செய்தி அனுப்புதல் என்பதைக் காட்டும் உறுதியான ஆதாரங்களை eSafety ஆணையாளருக்கு நாங்கள் வழங்கியுள்ளோம்.
இருப்பினும், சமமற்ற முறையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இச்சட்டத்தின் மீதான சமூகத்தின் நம்பிக்கையை இது குறைக்கும் அபாயம் உள்ளது என்று நாங்கள் நம்பினாலும் கூட இச்சட்டத்திற்கு நாங்கள் இணங்குவோம்.
டிசம்பர் 10 தொடங்கி, 16 வயதிற்குட்பட்ட ஆஸ்திரேலிய Snapchat பயனர்களின் கணக்குகளை நாங்கள் முடக்குவோம்.
தங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்வதற்காக Snapchatஐப் பயன்படுத்தும் இளம் வயதினருக்கு இது கடினமானதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பதின்ம வயதினரைப் பொறுத்த வரை, இணைந்திருப்பதும் தகவல் தொடர்புமே அவர்களின் மகிழ்ச்சிக்கும் நல்வாழ்விற்குமான வலுவான ஊக்க சக்திகளாகும். அதனை அவர்களிடமிருந்து பறிப்பது அவர்களைப் பாதுகாக்காது — மாறாக Snapchatஇன் பாதுகாப்பும் தனியுரிமை அரண்களும் இல்லாத மற்ற செய்தி அனுப்பும் சேவைகளை நோக்கி இது அவர்களைத் தள்ளக்கூடும்.
இணையத்தில் இளம் வயதினரைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் இலக்கினை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம், ஆனால் Snapchatஇல் தகவல்தொடர்பிற்கான அவர்களின் திறனைக் கட்டுப்படுத்துவது என்பது அந்த இலக்கை அடைவதற்கு உதவாது என நாங்கள் நம்புகிறோம்.
இந்தச் செயல்முறை முழுமைக்கும் நாங்கள் பொறுப்புடனும் வெளிப்படையாகவும் செயல்படுவோம், இதில் பயனர்கள் தங்கள் வயதினைச் சரிபார்க்க உதவுவதன் மூலம் அவர்கள் 16 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், அவர்களின் கணக்கினைத் தக்க வைக்க உதவுவதும் அடங்கும்.
நாங்கள் இந்தச் சட்டத்துடன் அடிப்படையில் உடன்படாவிட்டாலும், சட்டத்திற்கு முழுமையாக மதிப்பளித்து eSafety ஆணையாளர் மற்றும் அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமான வகையில் தொடர்ந்து ஈடுபடுவோம்.
நன்றி. உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.